கலகம் செய்யும் இடது கைபிரெஞ்சு மொழிபெயர்ப்புக் கதைகள்
தமிழில் : வெங்கட சுப்புராய நாயகர்எந்தப் பரிந்துரையும் இல்லாமல் தானாகத் தேடி வாசிக்கும் புத்தகங்களுக்குள் இலக்கியத்தின் தனித்த ருசி உண்டு. அப்படிக் கிடைக்கும் புத்தகங்கள் நமது அற்பத்தனங்களையும் கிளர்ச்சிகளையும் கலைத்துவிடும் வேலையைச் செய்யும்பொழுதும் கண்ணுக்குத் தெரியாதவனின் கதைகளும் நமது சொந்த மனமும் தங்களது ரகசியங்களை உரையாடிக்கொள்ளும் பொழுதும் எல்லாவற்றையும்விட இங்கே இலக்கியத்தின்மேல் மனம் அதீத நம்பிக்கை கொண்டுவிடுகிறது. அப்படித்தான் என்னோடு நெருங்கியிருக்கிறது ஜே.பி. சாணக்யாவின் கதைகளும், யூமா வாசுகியின் ஏழு நிறப்பூவும், விக்டர் ஹியூகோவின் மரண தண்டனைக் கைதியின் இறுதி நாட்கள் நாவலும். புதிதாக மேலுமொன்றை விரும்பியபோது கிடைத்த புத்தகம் "கலகம் செய்யும் இடது கை". பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள எட்டுக் கதைகளின் தொகுப்பு.
நமக்குத் தெரிந்த விசயங்களுக்குள்தான் குழந்தைகள் எப்போதும் சிந்திப்பார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். குழந்தைகளின் மனவுலகம் கதைகளைப்போலவே மாயத்தன்மை கொண்டது. இதிலுள்ள சிங்கரின் "சொர்க்கத்தின் கதை"யில் அட்செல் எனும் சிறுவனுக்கு யாரும் கேள்விப்பட்டிராத ஒரு நோய். அது தான் இறந்துவிட்டதாக நம்புவது. சீக்கிரம் புதையுங்கள் நான் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமென அடம்பிடிக்கிறான் அட்செல். அவனது பாட்டி சொர்க்கத்தைப் பற்றிய நிறைய வியப்பான கதைகளைச் சொன்னதுதான் இதற்குக் காரணம். பல மருத்துவர்கள் தோல்வியுற்று இறுதியில் வந்துசேரும் யோட்ஸ் அட்செலுக்காக சொர்க்கத்தை உருவாக்கி உரையாடும் தன்மை இன்று குழந்தைகளுக்கு அருகிலிருக்கும் ஒவ்வொரு மனதிற்குமானது.
கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகளைப்போலவே பியர் கிரிப்பாரியின் கதையும் உயிரற்ற பொருளுக்குப் பின்னுள்ள உயிருள்ள ஒன்றைப் பற்றி பேசுகிறது. பிரிய விரும்பாது பேசிக்கொண்டே இருக்கும் செருப்புகளின் கதை "ஜோடிப் பொருத்தம்". விற்கப்பட்ட செருப்பு பல மனிதர்களை சந்தித்து இறுதியில் தரிசு நிலத்தில் குப்பையாக வந்துவிழுகிறது. கடைசியில் அந்த செருப்புகளின் காதலைப் புரிந்துகொண்டவர்களாக இரண்டு குறும்புக்கார குழந்தைகள் வருகிறார்கள். நம்மைச் சுற்றி நிகழும் அர்த்தமற்றவைகளோடும் குழந்தைகள் கச்சிதமாக பொருந்திப் போகிறார்கள்.
ஒவ்வொருவரின் குரலைப்போலவே ஒவ்வொரு கதைசொல்லிக்கும் தனித்த குணம் இருப்பதையும் நாம் வாசித்தோ வாழ்ந்தோ அறிந்திடாத புத்துணர்வான கதைகள் எப்போதும் இங்கே மீதமிருப்பதையும் அற்பமானது என பொதுபுத்தியில் இறங்கிவிட்ட ஒன்றிற்குள் வாழ்தலின் அடத்தியான ஒரு பகுதி பொதிந்திருப்பதையும் இந்தக் கதைகள் எனக்குச் சொல்லியது.
நிழல்
•
விலை : ரூ. 90/-















































