Monday, April 29, 2019

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

ஜான் ஹோல்ட்
தமிழில் : அப்பணசாமி






















ஜான் ஹோல்ட்டை முதன்முதலாக வாசித்தபோது எனக்கு குழந்தைகள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்ற புரிதலைக்கொடுத்தது. இப்போதைய இரண்டாவது வாசிப்பில் வீடும் பள்ளியும் குழந்தைகள் குறித்த உணர்வில் மிகுந்த பிற்போக்குத்தனமானவை என்று தோன்றுகிறது. குழந்தைகள் குறித்த தனித்த கற்றலை நாம் எப்போது துவங்கப்போகிறோம்? என்பது இந்தப் புத்தகத்தின் வழியாக எழும் வலுவான கேள்வி. குழந்தைகளின் இயல்பை, சுயமான கற்றலை, குழந்தைகள் சுதந்திரமாக இயங்க வேண்டியதன் அவசியத்தை அதன் அர்த்த அடத்தியோடு பல அத்தியாங்களில் தன் சொந்த அனுபவங்களில் இருந்து எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட்.

பில் ஹல்லின் பின்வரும் மேற்கோளை ஜான் குறிப்பிடுகிறார் : 
"எவ்வாறு பேசுவது என்பதைக் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தந்தால், அவர்கள் ஒருபோதும் அதைக் கற்கமாட்டார்கள்." இந்த வியப்பான மேற்கோள் ஜானுக்கு முதலில் நகைச்சுவையாகப்பட்டது. ஜான் இந்தப் புத்தகத்தில் பேசும் பல பகுதிகள் நமக்கும் அப்படித் தோன்றும்படி இருக்கலாம். நாம்கூட குழந்தைகளுக்கு நாம்தான் பேசக் கற்றுக்கொடுத்ததாக நம்பிக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு வார்த்தைகளை நாம் சொல்லிக்கொடுத்திருப்போம்? எவ்வளவு வார்த்தைகளை அவர்களாகவே கற்றுக்கொண்டார்கள் என்பதை நாம் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.

இரவில் புத்தகம் வாசிக்க அமர்ந்தபொழுது அந்த 4 வயது சிறுமியும் குட்டிப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு என்னருகில் அமர்ந்தாள். இன்னும் வாசிக்கப்பழகாத அவள் திடீரென கையிலிருந்த புத்தகத்திலிருந்து "சப்பாத்தி" என்றாள். புத்தகத்தில் எட்டிப்பார்த்தால் "சபர்மதி" என்று எழுதியிருந்தது. எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்லித்தராத நிலையில் அவளாகவே வாசித்தது இது.

ஒவ்வொரு குழந்தையாலும் இயல்பாகவே தன் சூழலிலிருந்து பெரும்பாலானவைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. நாம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முழுமையற்ற புரிதலிலிருந்து குழந்தைகளின் இயல்பை நாம் குலைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜான் ஹோல்ட் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் கிடைத்த மதிப்பு நிறைந்த புதையல். அதிகம் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படாத இந்தப் புத்தகம் நம் சூழலில் மீண்டும் மீண்டும் வாசிப்புக்குத் தேவையானதாக இருக்கிறது. குழந்தைகளின் உள்உலகம் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு வரும் நம் சூழலில் குழந்தைகள் மீதான அனுகுமுறையில் நிதானத்தையும் நம்பிக்கையையும் உருவாக்க நம்மோடு பேசுகிறது இந்தப் புத்தகம். 

குழந்தைகள் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்ள விரும்புவதாக அவரே சொல்வது : 
"குழந்தைகளை நம்புங்கள். அதைவிட மேலானது அல்லது கடினமானது எதுவும் இல்லை. குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமென்றால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும்"


•

விலை : ரூ. 220/-



















No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...